X

சித்ரா பௌர்ணமி

Views: 73

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். சித்திரத்திலிருந்து சித்திர குப்தர் தோன்றிதை குறிக்கும் சித்திரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என புராணங்கள் கூறுகிறது.

சித்ராபௌர்ணமி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில், சந்திரபகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அண்மையில் அன்று சந்திரபகவான் இருக்கிறார். ஆகவே, அன்றைய தினத்தில், இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும். சித்ரா பௌர்ணமி சித்திரை மாதம் ஏற்படுகிறது. அப்போது சூரியன் தனது உச்ச வீட்டில் பலம் பெற்று நிற்பார். சந்திரனும் சூரியன் நீசம் பெறும் ராசியான துலாராசியில் செவ்வாயின் நக்ஷத்திரமான சித்திரையில் பூரண பலத்துடன் நின்று “அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்” என்பதற்கிணங்க சமசப்தமமாக பார்த்துக்கொள்வர்.

சித்ரா பௌர்ணமியன்று அதிகாலை, வீடு வாசலை மெழுகி, மாக்கோலமிட வேண்டும். இல்லத்தில், தெற்கு பார்த்து வாசற்கதவு அல்லது ஜன்னல் இருந்தால் திறந்து வைத்து, அந்த இடத்தை ஒட்டி, பூஜை செய்யும் இடத்தை அமைத்தல் சிறப்பு. பூஜை செய்யும் இடத்தில், ஒரு ஆள் அமர்ந்திருப்பது போல, சித்ரகுப்தர் உருவை மாக்கோலமிட வேண்டும். அவரது திருக்கரங்களில் ஏடும் எழுத்தாணியும் இருப்பது போல் வரைய வேண்டும். பழங்காலத்தில், ஏட்டையும் எழுத்தாணியையும் பூஜைக்கு வைப்பார்களாம். சில வீடுகளில் வாசலில் இருந்து பூஜை நடக்கும் இடம் வரை, மாக்கோல மாவால் பாதங்கள் வரைவதும் வழக்கம் ஆனால், சித்ரகுப்த பூஜைக்கு, 8 வடிவம் வரைந்து அதன் மேல் விரல்கள் இருக்குமாறு வரைவார்கள். சித்ரகுப்தரது படம் இருப்பின் அதனையும் வைத்துப் பூஜிக்கலாம்.சௌகரியப்பட்டால், கலசம் வைத்துப் பூஜிக்கலாம். இல்லாவிட்டால், சித்ரகுப்தரின் திருவுருவத்துக்கு தூப தீபம் காட்டி, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் சகல பாவங்களையும் நிவர்த்திக்க வேண்டி மனமுருகி வழிபட வேண்டும்.

ஏழு வண்ணங்கள் ஒன்றிணைந்து உருவான நீனாதேவிக்குப் பிறந்தவராதலால், வானவில்லின் ஏழு நிறங்களை நினைவுபடுத்தும் வகையில், சித்ரகுப்தருக்குப் பலவண்ண வஸ்திரம் சாற்றுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. நிவேதனத்துக்கு, தயிர்சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை முதலியவை நிவேதனம் செய்ய வேண்டும். பசும்பால், தயிர் முதலியவற்றை சித்ரகுப்தருக்கு நிவேதிப்பதில்லை. அன்றைய தினம் விரதமிருப்போர், உப்பு, பசும் பால், தயிர் முதலியவற்றை உட்கொள்வதுமில்லை. எருமைப் பால், எருமைத் தயிர் முதலியவையே நிவேதனம். அபிஷேகத்திற்கும் பசும் பால் உபயோகிப்பதில்லை. அன்றைய தினம் எருமைத் தயிர் உபயோகித்து செய்த தயிர் சாதத்தை பிரசாதமாக‌ விநியோகிப்பது வழக்கம்.

நதிகள், நீர்நிலைகள், கடல்கள் போன்றவற்றுக்கு அருகில் இருக்கும் மக்கள் குடும்பங்களுடன் கட்டுச் சாதம் எடுத்துச்சென்று, கூட்டமாக அமர்ந் துண்டு, மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் இந்நாளைக் கொண்டாடுவார்கள்.

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் முக்கிய விழா (இந்த வருடம் 10-5-2017) இந்நாளில்தான் கொண்டாடப்படுகிறது. அச்சமயத்தில் மதுரை மாநகரமே விழாக்கோலம் கொண்டிருக்கும்.

இந்த சித்ரா பௌர்ணமி விழ பல காலமாக தமிழர்களிடையே கொண்டாப்பட்டு வந்துள்ளமைக்குப் பல கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இந்த விழாவினைப் பற்றி திருச்சிராப்பள்ளி நெடுங்கலாதர் கோயிலிலும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் உள்ள கல்வெட்டில் ராசராச சோழன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு அவர் நிவந்தம் கொடுத்தமை கொடுத்த குறிப்பு உள்ளது.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.