Views: 44
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 2007-ம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி உலக மலேரியா தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு இன்று உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.
மலேரியாவால் ஒவ்வொரு 60 வினாடிக்கும் 1 குழந்தை உலகில் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகில் 97 நாடுகளில் மலேரியா நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் உலகளாவிய முயற்சியாக இந்நோயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஆண்டிற்கு 75 மில்லியன் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டது. 2030 -ம் ஆண்டிற்குள் நம் நாட்டில் மலேரியா தொற்று அறவே ஒழிக்கவும் மலேரியா இறப்பு தடுக்கவும் தீவிர செயல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் குறைந்துள்ளதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பரவும் விதம் :
மலேரியா நோய் என்பது ‘பிளாஸ்மோடியம்’ என்ற கண்ணுக்கு தெரியாத ஒரு செல் ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணி நல்ல நீரில் உற்பத்தியாகும் ‘அனோபிலஸ்’ வகை பெண் கொசு மூலம் மனிதனுக்கு பரவுகிறது. இவ்வகை பெண் கொசுக்கள் உணவிற்காக மனித ரத்தத்தை உறிஞ்சும் போது மலேரியா பாதித்த நபரிடமிருந்து ஒட்டுண்ணிகள் ரத்தத்துடன் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சப்பட்ட மலேரியா ஒட்டுண்ணிகள் கொசுவின் உடம்பில் வளர்ச்சியடைகிறது. 10 முதல் 14 நாட்களுக்கு பின் இக்கொசு ஆரோக்கியமான மனிதனை கடிக்கும் பொழுது உடம்பில் இவை செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் 9 வகை ‘அனோபிலஸ்’ கொசுக்கள் மட்டுமே மலேரியாவை பரப்புகிறது என கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 வகை கொசுக்கள் மட்டுமே மலேரியா நோய் பரப்பிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் நீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், சுத்தமான நீர்த் தேக்க தொட்டி மற்றும் தண்ணீர் உள்ள கிணறுகளில் உற்பத்தியாகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக சிகிச்சை பெற்றாலே இந்த நோயை அழித்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். காய்ச்சல் கண்டால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மலேரியா நோய் கண்டறிந்தால் தவறாது உரிய முறையில் மலேரியா மாத்திரைகள் சாப்பிட வேண்டும். பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (pv) என்றால் 14 நாட்களுக்கு குளோரோகுயின் மற்றும் பிரைமாகுயின் மருந்தும், பிளாஸ்மோடியம் பால்சிபரம ( pf ) என்றால் A.C.T மாத்திரைகள் 3 நாட்களுக்கும், வயது வாரியாக உட்கொள்ளவேண்டும். இந்த மாத்திரைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றியுள்ள இடங்களிலோ தண்ணீரை தேங்கவிட கூடாது.
மாத்திரைகள் இலவசமாக வழங்கும் இடங்கள் :
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொதுமருத்துவமனைகள், மற்றும் மருத்துவமனை கல்லூரிகள் ஆகியவற்றில் கருவுற்ற பெண்களுக்கும் மலேரியாவுக்கான ரத்த தடவல் சேகரிக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.
நாம் உறங்கும் போது கொசு வலைகளை பயன்படுத்துவது சுய பாதுகாப்பு முறையில் சிறந்த ஒன்றாகும்.