Views: 118
ஊட்டிக்குப் போய்வருகிற பெரும்பாலானவர்கள் பையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும் பொருள் யூகலிப்டஸ் எண்ணெய் . நாசியைத் துளைக்கும் இதன் நறுமணம் காரணமாக, ஒரு சொட்டை முகர்ந்து பார்த்தாலே நமக்குப் புத்துணர்வு கிடைத்துவிடும் உணர்வு தோன்றிவிடும். தலைவலி மருந்தாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய், `நீலகிரித் தைலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தலைவலியைத் தவிர வேறு என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் இது தீர்வு தரும்? பார்க்கலாம்…
முகப்பருவை குணப்படுத்தும்!
கண்ணுக்குத் தெரியாத சிறிய துளைகள் முகச் சருமத்தில் உள்ளன. இவை அதிகப்படியான எண்ணெயால் அடைக்கப்படுவதுதான் முகப்பரு தோன்றுவதற்கான காரணம். இந்த எண்ணெய், சரும எண்ணெய் சுரப்பிகளால் (Sebaceous glands) உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெயால் மூடப்பட்ட துளைகளில் `புரோப்பியானிபாக்டீரியம்’ (Propionibacterium) என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா உருவாகிறது. இதுதான் முகப்பருவாக மாறுகிறது. இதில் சீழ் கட்டிக்கொண்டால் வலிக்கும். ஐந்து சொட்டு யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் விட்டு, ஆவி பிடித்து வர, சரும எண்ணெய் சுரப்பிகள் சுருங்கும். உற்பத்தி செய்யப்படும் சரும எண்ணெயின் அளவை இது குறைக்கும். அத்தோடு புரோப்பியானிபாக்டீரியத்துக்கு எதிராகவும் யூகலிப்டஸ் எண்ணெய் செயல்படும்.
காற்றைச் சுத்தப்படுத்தும்!
காற்றின் மூலம் பரவக்கூடிய பூஞ்சைத்தொற்றால் ஜலதோஷம், தும்மல் போன்றவை ஏற்படும். சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை அறையில் தூவினால், இந்த பாதிப்புகள் குறையும். இந்த எண்ணெய் பூஞ்சைத்தொற்றுக்கு எதிரான தன்மைகொண்டது. துணி துவைக்கும்போது சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை நீரில் தெளித்தால், துணியிலுள்ள சிறு பூச்சிகள் அழிந்துபோகும்.
சுவாச நோய்களை குணப்படுத்தும்!
யூகலிப்டஸ் எண்ணெயை ஊற்றி ஆவி பிடித்தால், சளிப் பிரச்னைகள் தீரும். சளியால் ஏற்பட்ட அடைப்பை நீக்க, இந்த எண்ணெயை மார்பு மற்றும் மூக்கில் தடவலாம். சூடான நீரில் இதன் இலைகளைப் போட்டு, அந்த நீரால் வாயைக் கொப்பளிப்பது தொண்டைப்புண்ணைக் குறைக்கும். மூச்சுக்குழல் சம்பந்தமாக எந்தப் பிரச்னை வந்தாலும் உடனடியாக இதைப் பயன்படுத்தலாம். நல்ல தீர்வு கிடைக்கும்.
வலி நிவாரணி
ஒரு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையின்போது, ஒரு பிரிவினருக்கு யூகலிப்டஸ் எண்ணெய் சுவாசிக்கக் கொடுக்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு பாதாம் எண்ணெய் கொடுக்கப்பட்டது. அறுவைசிகிச்சையின் முடிவில் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தியவர்களைவிட, யூகலிப்டஸ் எண்ணெயைப் பயன்படுத்தியவர்களுக்கு வலி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஆராய்ச்சியாளர்களால் இது வலி நிவாரணியாகப் பரிந்துரைக்கப்படுகிறது. வலியுள்ள இடங்களில் இதைத் தடவிவர வலி குறையும்.
பொடுகுக்கு மருந்து
மலஸ்செஸியா ஃபர்ஃபர் (Malassezia furfur) என்ற பூஞ்சைதான் பொடுகுக்கு ஒருவகை காரணம். யூகலிப்டஸ் எண்ணெயுடன் (மூன்று துளிகள்) சிறிது தேங்காய் எண்ணெயைக் கலந்துகொள்ள வேண்டும். உச்சந்தலையில் இதை ஊற்றி மசாஜ் செய்துவிட்டு, சிறிது நேரம் கழித்து தலையைக் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவர தலை அரிப்புக்குக் காரணமான பொடுகுத்தொல்லை நீங்கும். ஷாம்பூவுடன் சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெயைக் கலந்தும் பயன்படுத்தலாம்.
காய்ச்சலுக்கு மருந்து!
வெந்நீரில், சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெயுடன் பெப்பர்மின்ட் எண்ணெய் (Peppermint oil) கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையில் முக்கி எடுத்த துணியை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உடலில் ஒற்றி எடுக்க, உடல் வெப்பம் குறையும். இந்தத் தன்மையால் இது, `காய்ச்சல் எண்ணெய்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பல் நலனைக் காக்கும்!
பற்குழி, பல் ஈறு வீக்கம் போன்ற பல் சார்ந்த பிரச்னைகளுக்கு இது தீர்வு தரும். மருத்துவர் ஆலோசனையுடன், யூகலிப்டஸ் சேர்க்கப்பட்டுள்ள பற்பசைகளை வாங்கி பயன்படுத்தலாம்.
குறிப்பு: இதை அப்படியே நேரடியாகப் பயன்படுத்துவது சரியல்ல. அதனுடன் தண்ணீர், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து நீர்த்துப்போகச் செய்த பின்னரே பயன்படுத்தவேண்டும். இந்த எண்ணெயை மருத்துவர் பரிந்துரையில்லாமல் குடிக்கக் கூடாது. கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. இதைப் பயன்படுத்தவேண்டிய விதத்தில் சரியாகப் பயன்படுத்தினால் அதன் சிறப்பான பலன்களை பெறுவது உறுதி.