Views: 75
ஒருவரது ரத்த வகையை அறிந்துகொள்ள ஆய்வுக்கூடத்தில் தான் சோதனை செய்ய வேண்டும். ஆனால், சீனாவை சேர்ந்த ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், காகிதப் பட்டையை வைத்தே எல்லா ரத்த வகைகளையும், 30 வினாடிகளில் அறிந்துகொள்ளும் முறையை உருவாக்கியுள்ளனர்.
வயதானவர்கள் நிலை தவறி கீழே விழுவதால் எலும்பு முறிவு முதல், பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, வயதானோர் கீழே விழுவதை மூன்று வாரங்களுக்கு முன்பே கணித்து சொல்லும் முறையை, அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களின் உதட்டு அசைவுகளை படித்து புரிந்துகொள்ளும் திறனை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு தந்து வெற்றி கண்டுள்ளனர். இது, மனிதர்களை விட துல்லியமாக பிறரது உதட்டசைவுகளை படித்து விடுகிறது. பி.பி.சி., செய்தி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகளை வைத்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அந்த மென்பொருளுக்கு பயிற்சி தந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய சிலந்தி வகை ஒன்றின் விஷம், 15 நிமிடத்தில் மனிதனை கொல்லும் சக்தி கொண்டது. ஆனால், அதே சிலந்தியின் விஷத்தில் உள்ள ஒரு பொருள், பக்கவாதம் தாக்கப்பட்ட மனித மூளையில் செல்கள் அழிந்துவிடாமல் காக்கும் திறன் கொண்டது என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ரோபோக்கள் மனிதர்களுடன் பழகும்போது, மனிதர்கள் சொல்வது புரியாமல் போக வாய்ப்புகள் அதிகம். இந்த குழப்பத்தை தவிர்த்து, மனிதர்களிடம் சரியான கேள்விகள் கேட்டு, விளக்கம் பெறும் திறனை ரோபோக்களுக்கு அளித்துள்ளனர், அமெரிக்காவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
இணையதளங்களுக்குள் அத்துமீறி, குளறுபடிகளை உருவாக்கும் மென்பொருட்களைத் தடுக்க, ‘கேப்ட்சா’ மற்றும் ‘ரீகேப்ட்சா’ போன்ற வடிகட்டும் முறையை கூகுள் உருவாக்கியுள்ளது. இதை இனிமேல் அதிகம் பயன்படுத்த தேவையில்லாதபடிக்கு ஒரு ஏற்பாட்டை அண்மையில் கூகுள் செய்துள்ளது. இதை பயன்படுத்தி இணையதளங்கள், தங்கள் பயனாளிகள் அசல் மனிதர்கள் தான், திருட்டு மென்பொருட்கள் அல்ல என்பதை உறுதி செய்துகொள்கின்றன. இனி அடிக்கடி இந்த கேப்ட்சாவை பயன்படுத்தாமல், இணையதளத்தின் பின்னணியில் செயல்படும் இயந்திர கற்றல் மென்பொருள் கண்காணிக்கும். பயனாளியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே கேப்ட்சா முறையில் படிவத்தை நிரப்ப வேண்டியிருக்கும். கேப்ட்சாவில் உள்ள எழுத்துக்களை பயனாளிகள் நிரப்புவது, அச்சு நுால்களில் உள்ள வாக்கியங்கள், வரைபடங்களில் உள்ள பெயர்கள் போன்றவற்றை டிஜிட்டல் மயமாக்கும் கூகுளின் திட்டத்திற்கு பயன்படுகிறது.