Views: 25
கடந்த நூறு வருடங்களாக கொடுமையான இருமலுடன் கடும் வலியைக் கொடுத்து ஆளையே காலி செய்து விடுவது காச நோய். பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் வேகமாக பரவும் நோய்களில் காசநோய் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில் இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. ஒவ்வொரு மூன்று நிமிஷத்துக்கும் 2 பேர் காச நோயினால் இறந்துவிடுகிறார்கள். காசநோய் கிருமியுள்ள சிகிச்சை பெறாத காசநோயாளிகள் இருமும்போதும், தும்மும் போதும் கிருமிகள் காற்றில் கலந்து ஆரோக்கியமாக உள்ளவர்களின் உடலுக்குள் சென்றுவிடுகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இக்கிருமி வேகமாக வளர்ந்து காசநோயின் அறிகுறிகளோடு வெளிக்காட்டுகிறது.
சில மருந்துகள் உதவியால் நோய் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புகள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமல் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. இந்நோய் இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை உடையது. இந்த நோய், குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இது வரும் வாய்ப்பு மிகமிக அதிகம்.
இந்தியாவில் 1993-ல் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன், ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம்’ அறிமுக ப்படுத்தப்பட்டது. இதன்படி, ‘டாட்ஸ்’ (DOTS) என்று அழைக்கப்படும் ‘கூட்டு மருந்துச் சிகிச்சை’ அளிக்கப்படுகிறது. நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தச் சிகிச்சையை மொத்தம் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், காசநோய் முற்றிலும் குணமாகிவிடும். ஆனாலும், காசநோய்க்கு மருந்து சாப்பிடாதது எவ்வளவு ஆபத்தானதோ, அதற்கு நிகரான ஆபத்தை உடையது மருந்தைப் பாதியில் நிறுத்திவிடுவது. காசநோய் முற்றிலும் குணமாகக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும். ஆனால், மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்து விடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நினைத்துப் பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.
இதனிடையே தனக்குக் காசநோய் இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால் சமூகத்தில் மரியாதை குறைந்துவிடும்; மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயந்தே பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை. காசநோயாளிகளில் 60 % முதல் 70 % பேர் வரை தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் பலருக்குத் தொடர்ந்து மாத்திரை வாங்குவதற்குப் பண வசதி இல்லாததாலும், வெளியூர்ப் பயணம், வேலைப்பளு, வேலையின்மை போன்ற காரணங்களாலும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். இவை அனைத்துமே காசநோயை ஒழிப்பதற்குத் தடையாக நிற்கின்றன.
► உலகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 % இந்தியர்கள்.
► உலகளவில் எச்.ஐ.வி, மலேரியாவைக் காட்டிலும் காச நோயால் உயிரிழப்பவர்கள் அதிகம்.
► 2015ல் காச நோயால் பாதிக்கப்பட்டோர் 28 லட்சம்; உயிரிழந்தோர் 4.83 லட்சம்
► இந்தியாவில் 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர்
► உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோய் சிகிச்சைக்கு வராமலேயே இருக்கிறார்கள்
► சிகிச்சை மேற்கொள்ளாத நோயாளிகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்குக் காசநோயை பரப்புகின்றனர்.
மேலும் நோய்க்குச் சிகிச்சை ஆரம்பித்த சில வாரங்களில் அறிகுறிகள் மறைந்து, நோயின் தீவிரம் குறைந்தது போலத் தெரிந்தாலும், நோய்க்கிருமிகள் உடலில் செயலிழப்பதில்லை. மருந்துகளை முறைப்படி எடுத்துக்கொள்ளாமல், விட்டுவிட்டு எடுத்துக்கொள்ளும் போதும், பாதியில் நிறுத்தும்போதும், நோய்க்கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடுவதற்கான திறனைப் பெற்றுவிடுகின்றன. அதன் பிறகு, ஏற்கெனவே கொடுத்துவந்த மாத்திரைகளால் இந்தக் கிருமிகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாது. இதன்விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB ) அது உருமாறிவிடும். இதற்கு இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும், இவர்களால் பரவுகின்ற காசநோயும் மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாகவே பரவுகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் வாழ உதவுவதற்கே உலக காச நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.