Views: 69
தமிழர்களின் தனிப்பெரும் உணவுச் சின்னமாக இருக்கும் இட்லி, தமிழக உணவுகளின் ராணியாகவே இருக்கிறது. நீராவியில் வேகவைக்கப்படும் இட்லி, எல்லா வயதினருக்கும் ஏற்றது; எளிதாக செரிமானமாகி தெம்பளிக்கும் சீரான உணவு. வயிற்றுக்கு பாதகம் செய்யாத பாதுகாப்பான இந்த உணவு, புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகளை தன்னகத்தேகொண்டது. இவை நாம் அறிந்த வரலாறு என்றாலும், இந்த நீண்ட பீடிகைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. உடலுக்குப் பாதுகாப்பான உணவாகக் கருதப்படும் இட்லியிலும் நோய்க்கிருமிகள் ஊடுருவிவிட்டன என்பது அண்மைக்கால அதிர்ச்சி!.
இட்லி
நான்குக்கு ஒன்று (4:1) என்ற விகிதத்தில் அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக அரைத்து, கலக்க வேண்டும். அரிசி கொரகொரப்பாகவும், உளுந்து பஞ்சு போலவும் இருக்க வேண்டும். 8 முதல் 10 மணி நேரம் வரை நொதிக்கவிட்டால், மாவு பஞ்சுபோல பொங்கும். இந்த மாவை இட்லித் தட்டுகளில் வேகவைத்தால், மல்லிகைப்பூ இட்லி ரெடி. இதில், தண்ணீர், உப்பு போன்றவற்றை சரியாகச் சேர்க்கத் தவறினால், மென்மையான இட்லிக்கு உத்தரவாதமில்லை.
அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்ற பாரம்பர்ய இயந்திரங்களைக் கண்டிராத, இன்றைய தலைமுறை இல்லத்தரசிகள், மிக்ஸி, கிரைண்டர்களுக்கும் ஓய்வு கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இட்லிக்குப் பதம் பார்த்து மாவு அரைத்து எடுப்பதற்கெல்லாம் பெருநகர அவசர வாழ்க்கை அவகாசமளிப்பதில்லை. இவர்களுக்காகவே, தெருவுக்கு தெரு ரெடிமேட் இட்லி மாவுக் கடைகள் முளைத்துள்ளன. தேவைக்கேற்ப மாவு வாங்கி, இட்லி அவித்துக்கொள்ளலாம் அல்லது தோசை வார்த்துக்கொள்ளலாம்.
இதில்தான் வில்லங்கம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இட்லிக்கான மாவு பக்குவமாக மட்டுமல்ல, சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆனால், பல இட்லி மாவுக் கடைகள் சுகாரதார முறைகளைக் கடைபிடிப்பதில்லை என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.
தோசை
முறையாகச் சுத்தப்படுத்தப்படாத மெகா சைஸ் கிரைண்டர்கள், பாத்திரங்கள், மாவு அரைக்கப் பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற தண்ணீர் போன்றவற்றில் ஈகோலி (E-Coli) என்ற பாக்டீரியாக்கள் இருக்கும். இது மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவில் இருக்கக்கூடிய பாக்டீரியா இது. மாவு அரைக்கும்போது, சுகாதாரமற்ற தண்ணீரோடு சேர்ந்து இட்லி, தோசை மாவில் இந்த பாக்டீரியாக்கள் தஞ்சமடைகின்றன.
மனிதனின் உடலை சொகுசு பங்களாக்களாகக் கருதும் இந்த பாக்டீரியாக்கள் அங்கே சகல சௌபாக்கியங்களுடனும் வசிக்கத் தொடங்குகின்றன. பின்னர், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலைசுற்றல் ஆகியவற்றை வரிசைகட்டி அனுப்புகின்றன. சில ஈகோலி பாக்டீரியா ரத்தச்சோகை, சிறுநீரக செயலிழப்பு, சிறுநீர் பாதைத் தொற்று போன்றவற்றைக்கூட ஏற்படுத்தும்.
`இட்லி மாவை ஆவியில் நன்றாக வேகவைத்துத்தானே சாப்பிடுகிறோம்… அப்போது ஈகோலி பாக்டீரியாக்கள் இறந்துவிடாதா?’ என்ற கேள்வி எழலாம். என்னதான், வேகவைத்தாலும், குற்றுயிரும் குலையுயிருமாக மனித உடலுக்கு ஊடுருவிவிட்டால், அந்தப் பாக்டீரியாக்களுக்கு பின்னர் சுக்ர திசைதான். “என் மகளுக்கு 4 வயது. அவளுக்கு அடிக்கடி வாந்தி மற்றும் காய்ச்சல் வரும் பிரச்னை இருந்தது. இட்லி, தோசைதானே சாப்பிடுகிறாள் ஏன் அவளுக்கு வாந்தி வருகிறது எனப் புரியாமல் இருந்தோம். காரணம் தெரியாமல் ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். மருத்துவரும் சிகிச்சை கொடுத்து அவளைத் தேற்றுவார். பின்னாளில் ஏன் இப்படி வருகிறது எனக் கண்டுபிடிக்கையில், எங்கள் வீட்டு கிரைண்டர் ரிப்பேரானதால், அருகில் உள்ள கடையில் தோசை மாவு வாங்கும் பழக்கத்தில் இருந்தோம். அந்த மாவில் தோசையோ இட்லியோ செய்து கொடுத்தால், அவளுக்கு ஒத்துகொள்ளாமல் வாந்தி வருகிறது, பின்னர் காய்ச்சலும் வருகிறது எனக் கண்டுபிடித்தோம்” என்கிறார் கோயம்பேட்டைச் சேர்ந்த கிருஷ்ணன்.
மாவு
`சாதாரண தெருமுனைக் கடைகளில் மாவு வாங்கினால்தானே பிரச்னை… சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கிக்கொள்ளலாம்’ என்று அதிமேதாவித்தனமாகத் தோன்றும் யோசனைகளும் வேண்டாம். அவையும் தரமானவை தானா என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன.
அலங்கார பாக்கெட்டுகளில் அடைத்த சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் மாவிலும் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. மாவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும், உடனடியாக புளிக்காமல் இருக்கவும் கால்சியம் சிலிகேட் (Calcium Silicate) சேர்க்கப்படுகிறது. இதுவும் செரிமான மண்டலத்துக்குப் பிரச்னை தரக்கூடிய ஒன்றுதான்.
அவசரத் தேவைக்காக அவஸ்தைகளை விலைகொடுத்து வாங்காமல், கூடுமானவரை இட்லி தோசை மாவை வீட்டிலேயே தயாரித்துக்கொள்வது, வருமுன் காப்பதற்கான எளிய வழி!