X
    Categories: Information

குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க

Views: 86

குழந்தைகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதெல்லாம் கொள்ளுப் பாட்டிகளுக்கு கை வந்த கலை. குழந்தைக்கு மாதத்தில் ஒரு நாள் விளக்கெண்ணெயைக் குடிக்க வைத்து வயிற்றைச் சுத்தம் செய்வார்கள். பின்பு பத்தியச் சாப்பாடு கொடுத்து பேரன் பேத்திகளின் உடல்நலத்தைக் காப்பார்கள். எல்லாரும் வளர்ந்து நின்ற பின்னும் இதுவே வழக்கமாக இருக்கும்.

வீட்டு மருத்துவத்தை விட்டொழித்து அலோபதி மருத்துவத்தை நம்பிய பின் மருத்துவராய் பார்த்து வயிற்றில் பூச்சி இருக்கலாம் என்ற கணிப்பில் பூச்சி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கப்படுவதில்லை. குடற் புழுக்கள் ஜாலியாக வளர்ந்து குழந்தைகளைப் படுத்தியெடுக்கும்.

தமிழக பள்ளிகளில் 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக இந்தக் குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் அம்சவேணி கூறுகையில்,

“குடற்புழுக்களின் அட்டகாசம், சுவையான உணவையும் சாப்பிட விடாது. போதிய சத்துணவு எடுத்துக் கொள்ளாததால் உடல் மெலிந்தும், வெளுத்தும் காணப்படுவார்கள். வறட்டு இருமல், இளைப்பு மற்றும் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

குடற்புழு தொற்று இருப்பவர்கள் அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருப்பது போல் உணர்வார்கள். குடற்புழு உள்ளவர்களுக்கு தோல் பகுதியில் வெள்ளைத் திட்டுகள் இருப்பதால் அரிப்பால் அவதிப்படுவார்கள். சில புழுக்கள் குழந்தையின் ஆசனவாயில் முட்டையிடுவதால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு இரவில் அவதிப்படுவதைப் பார்க்கலாம்.

ஒரு புழு, ஓர் ஆண்டில் 300 முட்டைகள் வரை இடுகிறது. கொக்கிப்புழு மற்றும் குடற்புழு என்று இரண்டு வகையாக புழுக்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடற்புழு நீக்க மாத்திரை புளிப்புச் சுவையில் இருக்கும். அப்படியே மென்று சாப்பிட வேண்டியதுதான். வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் இருக்காது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை குழந்தைகள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மாத்திரை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் ஆய்வு செய்யப்பட்டது. கொக்கிப் புழுக்கள் குழந்தைகளின் ரத்தத்தை உறிஞ்சுவதால் ரத்த சோகை நோய்க்கு ஆளாகின்றனர். வயிற்றுப் பிரச்னைகளோடு, சோர்வாகவும் காணப்படலாம். இதனால், குழந்தைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து விடுகிறது. இந்த புழுக்களின் அட்டகாசம் அவர்களின் மூளைத்திறனில் கை வைத்து படிப்பை காலி செய்வது வரை நடக்கிறது.

அதனால்,  இரண்டு வயது வரை அரை மாத்திரை வழங்கப்படுகிறது. இரண்டு வயதுக்கும் மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு  400 மிலி கிராம் அளவு கொண்ட ஒரு மாத்திரை வழங்கப்படுகிறது.

இந்த மருந்து கொடுக்கப்பட்ட பின்பு குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்றல் குறைந்துள்ளது. ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாப்பதுடன் படிப்பிலும் கவனம் செலுத்த குழந்தைகளுக்கு உதவுகிறது. குறிப்பிட்ட வயதுள்ள அனைத்து குழந்தைகளும் குடற்புழு நீக்க மருந்தை ஆறு மாத இடைவெளியில் எடுப்பது நல்லது. இந்த மாத்திரையைக் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் அதற்கான முன் தயாரிப்புகள் குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. குடற்புழு மாத்திரை எடுத்துக் கொள்ள குழந்தைகள் பயப்படத் தேவையில்லை’’

*படித்தேன்; பகிர்ந்தேன்*

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.