Views: 97
வணக்கம்!! இன்று[24-02-17] இந்து சமயம் போற்றும் மகா சிவராத்திரி. எல்லோருக்கும் சிவராத்திரி பற்றிய விவரம் ஓரளவு தெரிந்து இருக்கும். சிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
சிவராத்திரியின் வகைகள்
சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை: நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாக சிவராத்திரி.
நித்ய சிவராத்திரி: வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறைகளில், சதுர்த்தசி திதி இடம்பெறும் நாட்களில் வரும் இரவுகள் நித்ய சிவராத்திரி ஆகும். அதேபோல், தினமும் இரவு அர்த்தஜாம பூஜை நடைபெறும் காலத்தையும் நித்ய சிவராத்திரி என்று சொல்வது உண்டு.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளை ஒட்டி அனுஷ்டிக்கப்படுவது, மாத சிவராத்திரி ஆகும். இந்த மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும். அந்த விவரமும், குறிப்பிட்ட அந்த தினங்களில் வழிபட்டு சிவனருள் பெற்றவர்களின் பட்டியலும் வருமாறு:
சித்திரை – தேய்பிறை அஷ்டமி. இந்த தினத்தில் உமாதேவி வழிபட்டு அருள்பெற்றாள்.
வைகாசி – வளர்பிறை அஷ்டமி; சூரியன்.
ஆனி – வளர்பிறை சதுர்த்தசி; ஈசானன்.
ஆடி – தேய்பிறை பஞ்சமி; முருகன்.
ஆவணி – வளர்பிறை அஷ்டமி; சந்திரன்.
புரட்டாசி – வளர்பிறை திரயோதசி; ஆதிசேஷன்.
ஐப்பசி – வளர்பிறை துவாதசி; இந்திரன்.
கார்த்திகை – வளர்பிறை சப்தமி மற்றும் தேய்பிறை அஷ்டமி; சரஸ்வதி.
மார்கழி – வளர்பிறை சதுர்த்தசி மற்றும் தேய்பிறை சதுர்த்தசி; லட்சுமி.
தை – வளர்பிறை திரிதியை; நந்தி.
மாசி – தேய்பிறை சதுர்த்தசி; தேவர்கள்.
பங்குனி – வளர்பிறை திரிதியை; குபேரன்.
பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, தொடர்ந்து 13 நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, 14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது, `பட்ச சிவராத்திரி’ எனப்படும்.
யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு வகை உண்டு. அதன் விவரம்:
1. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி)அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.
2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை தேய்பிறை சதுர்த்தசி இருப்பதும் யோக சிவராத்திரி ஆகும்.
3. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணி முதல் 6 மணி வரை) அரை நாழிகைப் பொழுது அமாவாசை இருந்தாலும் அது யோக சிவராத்திரி ஆகும்.
4. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருப்பதும் யோக சிவராத்திரி.
இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.
மாக சிவராத்திரி: மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே `மாக’ சிவராத்திரி. இதையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.
‘ராத்திர’ என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம். இதனால், இம்மையில் சுகானந்த வாழ்வையும், மறுமையில் சுகப் பேரானந்த வாழ்வையும் பெற்றுச் சிறக்கலாம்.
இனி, மகிமைகள்மிகு மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில், சிவனாரை வழிபடுவதற்கு உரிய நியதிகள் மற்றும் விரத தாத்பர்யங்கள் குறித்து விளக்கமாக அறிவோமா?
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
1. முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.
2. சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.
3. அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.
4.ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
5.பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும்.
6.அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக , மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை நந்து வீடு திரும்பவேண்டும்.
7.வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.
8.இந்த நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.
9.சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.
10.அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம்.
11.அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.
செய்யக்கூடாதவை
1.பகலில் தூங்கக் கூடாது.
2.சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.
3.சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.