X

ஆல்கலைன் உணவுகள்

Views: 521

அறுசுவை எனப்படுவது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. அவையாவன: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியனவாகும். ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.
நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்திற்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும். ஆனால் இந்த விகிதத்திற்கு தலைகீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தை சரி செய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை.

நாம் உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது என்ன அமிலம், காரம்? அமிலம், காரம் இவை இரண்டும் உணவின் சுவையைக் குறிப்பவை அல்ல. மாறாக, அதன் தன்மையை குறிப்பவை. உதாரணமாக ஆங்கிலத்தில் அமிலத்தை `ஆசிட்’ (Acid) என்றும், காரத்தை `ஆல்கலைன்’ (Alkaline) என்றும் அழைப்பார்கள். நாம் உண்ணும் உணவில் அமில, காரத்தன்மைகள் சமநிலையில் இருக்கவேண்டியது அவசியம். ஆனால், இன்று மக்கள் அதிகமாக விரும்பும் துரித உணவில் அமிலத்தன்மைதான் அதிகம் இருக்கிறது. இதனால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான பலவித நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. காரத்தன்மையுள்ள உணவுகள் நம் உடலில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தை நீக்கி, சமநிலையை உருவாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுடன் போராடவும் உதவுகின்றன. எனவே, காரம் காப்பாற்றும் என நம்பலாம். நாம் சாப்பிடுவதற்கு ஏற்ற ஏழு வகையான காரத் தன்மையுள்ள உணவுகள் இங்கே…

பாதாம்

ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடவேண்டிய பருப்பு வகைகளில் பாதாமும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளன. குறிப்பாக வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. புரதம், நார்சத்துகளோடு சேர்த்து உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3, ஒமேகா-6 இதில் உள்ளன. இவை ரத்தத்தில் கொழுப்பின் அளவைச் சீராக்கி, இதய நோய் ஏற்படாமல் தடுக்கும். இவை தவிர பாதாம் பருப்பில் வைட்டமின் இ, வைட்டமின் பி3, துத்தநாகம், சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், தாமிரம், மக்னீசியம் போன்ற பல சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை, `மிகச் சிறந்த நச்சு மற்றும் அமில நீக்கி’ என்றே கூறலாம். வெள்ளரிக்காய் சாறு, அதிகப்படியான யூரிக் அமிலத்தால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகான், குளோரின் ஆகியவை உள்ளன. இவை மட்டுமல்லாமல் ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியமும் அதிகம். வெள்ளரி, சூட்டைத் தணிக்கும் தன்மைகொண்டிருப்பதால் பலவிதமான நோய்களுக்கு நிவாரணம் தரும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் உள்ள காரத்தன்மை, சில புற்றுநோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவற்றில் இருந்து விடுபடவும் வழிவகுக்கும். இதில் உள்ள நார்ச்சத்தினாலும், இது. குறைந்த கொழுப்புத் தன்மை உள்ளது என்பதாலும் ஒவ்வோர் உணவுக் கட்டுப்பாட்டு முறையிலும் (டயட்) இது பயன்தரக்கூடியது. முட்டைக்கோஸ் மறதி நோய், நரம்புத் தளர்ச்சி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவற்றையும் தடுக்க உதவும். முட்டைக்கோஸில் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை அதிகம் உள்ளன.

பெங்களூர் தக்காளி

உடலில் இருந்து அதிக அளவில் அமிலத்தை நீக்கும் தன்மைகொண்டது, பெங்களூர் தக்காளி. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளைப் போக்கவும், சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் இது உதவும். அதோடு, உடலுக்கு நீர்ச்சத்து தரவும் பயன்படும். வைட்டமின், கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன.

திராட்சை
திராட்சை, நட்சத்திர உணவு வகைகளில் ஒன்று. நம் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கி, எடையைக் குறைப்பதில் உதவுகிறது. இதில் இருக்கும் குறைந்த அளவு சர்க்கரையால் ரசித்து உண்ணக்கூடிய பழமாகவும் இருக்கிறது. வைட்டமின் ஏ, விட்டமின் சி, வைட்டமின் பி6, ஃபோலேட் (Folate), தாதுஉப்புகளான பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் திராட்சையில் அதிகம் உள்ளன. மேலும், இது சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுவதால் இதயநோய், புற்றுநோய் முதலியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

எலுமிச்சை
மிகவும் புளிப்பாகவும் சுவைப்பதற்கு அமிலத் தன்மை உடையதாகவும் இருப்பதால், இது அமிலத்தை உருவாக்கும் என்கிறார்கள். ஆனால் அதற்கு மாறாக உடலில் காரத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தவும் நச்சுக்களை நீக்கவும், புற்றுநோய், சிறுநீரகக் கற்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் தடுக்கவும் உதவும். வைட்டமின்கள் நிறைந்த எலுமிச்சை, யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றக்கூடியது. மேலும், சரும வளர்ச்சி, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

துளசி
துளசி, நச்சு நீக்கியாகவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும், சீறுநீரகக் கற்கள் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றான அமில அளவை உடலிருந்து குறைக்கவும் உதவுகிறது. மேலும், இது சிறுநீர் வெளியேறும் அளவை அதிகப்படுத்தி, சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்த உதவுகிறது. துளசி சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால் நீரிழிவு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், நோய்த் தொற்றுகள் போன்றவற்றைத் தடுக்கும். ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படும்.

மேற்கண்ட உணவுகள் தவிர கீரைகள், கேரட், குடைமிளகாய், காலிஃப்ளவர், இஞ்சி, பூண்டு, தேங்காய், சிறுதானியங்கள் போன்ற பல உணவு வகைகள் காரத்தன்மைகொண்டவை. இவற்றை நம் உணவுமுறையோடு சேர்ப்போம்; ஆரோக்கியம் காப்போம்!

*படித்தேன்; பகிர்ந்தேன்* இந்த பதிவை பார்க்கும் அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

Related Post
Show comments

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.